நாளுக்குநாள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீருக்கான தேவைகளும் அதன்மூலம் ஏற்படும் விளைவுகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.
சரி, இப்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில், யானை வந்தது, பயிர்களை நாசம் செய்தது, மனிதர்கள் விரட்டினர், அவர்களை யானையும் விரட்டியது, சிறுத்தை வந்தது, அதை வனத்துறையினர் பிடித்தனர்; மிருகங்களின் அட்டகாசம் மக்கள் அச்சம்! என்ற செய்தி வராத நாளே இல்லை என்ற நிலைக்கு நாம் வாழும் இந்த மாநிலப்பகுதி வெகுவிரைவில் வந்து சேர்ந்துவிட்டது. முறைமையில் திரிந்ததன் விளைவு இது.
மலைக்காடுகளில் போதுமான நீர் வசதி இல்லாததாலும், உணவுத்தேவை ஏற்படுவதாலும் மிருகங்கள் தங்களின் வாழிடம் விட்டு மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்துவிடுகின்றன என்ற விளக்கம் சரியாக இருந்தாலும், ஏன் நீர் வசதி இல்லை? மிருகங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுவதைத் தடுக்க இயலுமா?
காடுகளில் மட்டுமல்ல, முற்றிலும் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் தான் நீர் குறித்தான பற்றாக்குறை அம்சங்கள் கணக்கிலடங்காமல் பெருகிவிட்டன. சுற்றிலும் தண்ணீரைத் தடைசெய்து தன்பலம் காட்டும் மனிதாபிமானமில்லாத மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழ்நாட்டில் இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புற வாழ வேண்டிய வழிமுறைகள் நீர் மேலாண்மையில் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.
நமக்கு அளிக்கப்பட்டுள்ள-நமக்காக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள நீர் ஆதாரங்களையும், அதன் பாரம்பரியக் கட்டமைப்புகளையும் சிதிலமடையாமல் பாதுகாப்பதும், சிதிலமடைந்தவைகளைப் புனரமைப்பதுமான கடமை நமக்கும் இருக்கிறது என்கிற பொறுப்புணர்வு அனைவருக்கும் தேவையான ஒன்று.
இயற்கையான நீர்வழிப் பாதைகளின் பாதுகாப்புக்கு அரசும், சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்களும்தான் காவலாளிகள். நமது அடிப்படை உரிமைகளில் ஒன்று நன்னீர் பெறுவது. மேலும் நமக்குப் பிறகு வரும் தலைமுறைக்கு நாம் தரக்கூடிய வெகுமதி சரியான, தேவையான அளவு நீர்கிடைக்கச் செய்வதாகும். இது தலைமுறைகளின் தவிர்க்கவியலாத கடமை. எனவே நீர் நிர்வாகத்தில் சற்றும் பின்தங்கி விடாத கொள்கையுடையவர்களாக நாம் இருக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இவ்விதமாக இருப்பதுதான் இன்றுள்ள நீர் பற்றாக்குறையால் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உழவுத் தொழிலுக்கு இயற்கையான நீர்வளம் போதாது எனும் நிலையில், அரசர்களால் செயற்கையான நீர்வள அமைப்புகள் உருவாக்கப்பட்டன. வெள்ளச்சேதம் நேராதவாறும், வேளாண் தொழிலுக்கு ஏற்ப பாய்ச்சலுக்கு நீர் ஓடுமாறும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
ஆறுகளுக்குக் கரைகள் ஏற்படுத்தலும், நீரைத் தேக்க வேண்டிய இடத்தில் அணை கட்டுவதும் திட்டமிட்டுச் செய்யப்பட்டன. பேராற்றின் மூலம் கண்ணாறும், கண்ணாற்றில் இருந்து கால்வாயும், கால்வாயில் இருந்து வாய்க்கால் வெட்டலும் நிகழ்ந்தன. இவை செய்ய இயலாத இடங்களில் ஏரி, குளங்களும் அரசர்கள் காலத்தில் வெட்டப்பட்டன. கண்ணாறுகளும், கால்வாய்களும் பெரும்பாலும் சோழநாட்டில் உருவாக்கப்பட்டன. ஏரி குளங்கள் அதிகமாகப் பாண்டிய நாட்டில் வெட்டப்பட்டன. இவ்விதமாக உருவாக்கப்பட்ட நீர் மேலாண்மைக் கட்டமைப்புகள் தகுந்த பயனைத் தந்தன. வேளாண்தொழில் பெருமை தரும் வளர்ச்சி அடைந்திருந்தது என்பதை வரலாறு நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
தமிழகத்தின் நீர்வளம் இந்தியாவின் நீர்வளத்தில் 2 சதவீதமாக இருக்கிறது. ஓர் இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் நீரில் 3-ல் ஒரு பாகம்தான் தமிழகத்தில் வாழும் குடிமகனுக்குக் கிடைக்கிறது. தற்போதுள்ள நீர்வளத்தைச் செம்மையாகக் கையாளவும், பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை உரியமுறையில் சேமிக்கவும் தகுந்த திட்டங்களையும் நடைமுறைகளையும் வகுக்க வேண்டும். வகுக்கப்படும் திட்டங்களின் அடிப்படையில் மக்கள் அவற்றைப் பின்பற்றி வருங்கால சமுதாயத்துக்குக் காத்துத் தர வேண்டும்.
ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தக் கூடிய தாய்மடிகள். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் வெறும் எழுச்சி முழக்கமாக மட்டுமே பார்க்கப்படும் நிலை மாற வேண்டும். வேதனையைத் தீர்க்கும் மருந்து அரசிடம் மட்டுமே இருக்கிறது என்பது ஒருபுறம் உண்மையாக இருந்தாலும் மக்களுக்கும் அதில் பங்கிருக்கிறது.
குளங்களும், ஏரிகளும், ஊருணிகளும், கண்மாய்களும் தனிநபர்களின் லாபநோக்கத்துக்காக, மெகா விளம்பரங்கள் மூலம் விலைக்குப் பிரித்தளிக்கப்படும் ரியல் எஸ்டேட்டுகளுக்காக அமைக்கப்பட்டவை அல்ல.
அரசுத் துறைகளின் அட்டகாசமான அலுவலகங்கள் எழுவதற்குத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவைகளும் அல்ல. வேளாண்பெருக்கத்துக்கும், உழுதுண்டு வாழ்வோரை உய்விக்கவும், மக்களின் நலன்மீது கொண்டுள்ள மேன்மையான அக்கறையின் வெளிப்பாடாகவும் அமைக்கப்பட்டவை. வெட்டப்பட்டவை.
ஆனால் நமது மாநிலத் தலைநகரம் சென்னையில் ஏரிகளைத் தூர்த்து மேடாக்கிக் கட்டப்பட்ட நகரம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இதுபோலவே வளம்பல தந்த ஏரிகளும், குளங்களும் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன! கட்டடக் காடுகளாய் மாறிக்கொண்டு இருக்கின்றன.
தமிழகத்தின் மொத்த ஆற்றுப்படுகைகள் - 33 மொத்த நீர்ப்பாசனத் தேக்கங்கள் 52, மொத்த ஏரிகள் 39,000, இதில் வானம் பார்த்த ஏரிகள் 25,600. 18,26,906 கிணறுகளில் 13 லட்சத்துக்கு மேற்பட்ட கிணறுகள் மின்மோட்டார் வசதி கொண்டவை. மேற்கண்ட நீர்சேகரிப்புக் கட்டமைப்புகள் 95 விழுக்காட்டுக்கு மேல் பருவ மழையை மட்டுமே நம்பி உள்ளன.
பருவமழையால் கிடைக்கும் மொத்த நீரின் அளவு சராசரியாக 2,400 கோடி கனமீட்டர். அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி வரும் நீரின் அளவு சுமராக 1,200 கோடி கனமீட்டராக இருக்கிறது என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
வாய்ப்புள்ள மொத்த நிலத்தடி நீர் 2,640 கோடி கனமீட்டர். இதில் 1,320 கோடி கனமீட்டர் தண்ணீர் இறைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு அபாயகரமாகக் குறைந்து கொண்டே வருகிறது.
ஆறுகளிலும், நீர் வழிப்பாதைகளில் ஓடிவரும் தண்ணீரை நடக்க வைக்க வேண்டும், நடக்கும் தண்ணீரை நிற்க வைக்க வேண்டும்; நிற்கும் தண்ணீரை பூமியின் உள்ளே செலுத்த வேண்டும் என்கிற செயல்முறைகளால் மட்டுமே நீர் பற்றாக்குறை அபாயத்தில் இருந்து மீளமுடியும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை ஆர்வலர்கள் குரல் கொடுப்பது எவ்வளவு பொருள் பொதிந்தவையாக இருக்கின்றன.
ஆற்றில் வருகிற நீர் மற்றும் குளம், குட்டைகள், ஏரிகள் போன்ற இன்னபிற நீர் ஆதாரக் கட்டமைப்புகளின் மீது அவசியமான அவசரமான, அலட்சியமற்ற கவனம் கொள்ள வேண்டிய காலமிது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள காட்டு வளங்களை அதிகரிக்கச் செய்யத் தேவையான திட்டங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டும். அத்திட்டங்களில் அப்பகுதி மக்களின் பங்கேற்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தின் நதிகள் அனைத்தும் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்தே இருக்கின்றன. நீர்வளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் காடுகளைப் பாதுகாப்பது, காடுகளின் பரப்பளவை அதிகரிப்பது என்பது தான் தேவைக்கு ஏற்ப நீர் பெறுவதற்கான ஒருவழியாக இருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்த்துச் செயல்படுவது நல்லது.
ஏற்கெனவே உள்ள நீர்சேகரிப்பு அமைப்புகளை நூறு விழுக்காடு பயன்பாடு தன்மையுள்ளதாக உருவாக்குவது, அவ்வமைப்புகளுக்கு நீர் வரும் சிறு சிறு பாதைகளை அடையாளம் கண்டு பராமரிப்பது, அரசு நிலங்கள் மட்டுமல்ல, தனியார் நிலங்களின் ஊடேயும் மண்கரைகள் அமைத்து மழைநீர் நிலத்தடிக்குப் போகக் கூடிய சூழலை ஏற்படுத்துவது, மேலும் புதிய புதிய நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குவது போன்றவையே தண்ணீர் சேகரிப்பு நிலையமாக நமது மாநிலம் சிறப்புற உருவாக வழி செய்யும். வீடுகள், கட்டடங்களிலும் நீர் சேகரிப்பு அமைப்புகள் அவசியம் இடம் பெற வேண்டும்.
"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை' எனும் திருக்குறளும், "அமுதூறு மாமழை நீரதனாலே அமுதூறும்' எனப் பேசிய திருமந்திரமும் தொடங்கி வைத்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் பயணிப்போம்.
மழை நீர் சேகரிப்புச் செயல்பாடுகளில் இயன்ற பங்களிப்பை நல்குவது, இருக்கின்ற நீர்வள ஆதாரங்களை அழியாமலும் மாசடையாமலும் தடுப்பது போன்ற செயல்களை வாழ்வின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்வது நமது நல்வாழ்வுக்கு உத்தரவாதமளிக்கும்.
புதிய வாழ்க்கை முறை, பற்றாக்குறையற்ற தண்ணீர் வளம் என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்; அது அவசியமும் கூட. இது அரசுக்கும் புரியும்; எனவே உரத்துச் சொல்லுவோம் "மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!''
ம.தென்னரசு
நன்றி தினமணி
Sunday, 13 June 2010
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பயனுல்ல செய்தி.
ReplyDeleteஉங்களிடமிருந்து நிறைய படைப்புகளை எதிர்ப்பார்கிறேன்.
வாழ்த்துகள்
உங்கள் வலைப்பூ நம் அதிரைமணத்துடன் சேர்ந்து நல்ல வாசனையுடன் மணக்க ஆரம்பித்துள்ளது சென்று பாருங்கள்.
அதிரைகும் அதிரை வாழ் மக்களுக்கும் மகிழ்சிகரமான செய்தி உமர் தம்பி அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்
ReplyDelete