Powered by Blogger.

Tuesday 29 June, 2010

மானாவாரிகள் மறைந்த மர்மம் என்ன?

இருபத்து ஒன்றாவது நூற்றாண்டில் மனித சமுதாயம் பறிகொடுத்த இயற்கைவள இழப்புகளில் இந்தியாவைப் பொருத்தவரை உடல் வளத்துக்கும், நலவாழ்வுக்கும் அடிப்படையாயிருந்தவை மானாவாரி உணவுப்பயிர்களான புஞ்சைத் தானியங்களும் பருப்புவகைப் பயிர்களும் என்றால் அது மிகை இல்லை. மணல் கொள்ளையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். மக்களுக்கு ஊட்ட உணவை விளைவித்துத்தரும் சத்தான மானாவாரி மண் இன்று கொள்ளை போவதைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க முடியாது. நாலுவழிச் சாலைகளும் எட்டுவழிச் சாலைகளும் உலக வங்கிக் கடனில் உருப்பெறுவது எவ்வளவு தூரம் தேவை என்று புரியவில்லை. நல்லுணவு விளைந்த மண்ணெல்லாம் விலை பேசி வீதி சமைக்கப்படுகிறது. மானாவாரிப் பயிர் சாகுபடி செய்து மகிழ்ந்த விவசாயிகள் வாழ்ந்த நாடு நமது பாரதம். இந்த இருபத்தி ஒன்றாவது நூற்றாண்டு இந்திய விவசாயிகள் நிலத்தை விற்பதில்கூட ஏதோ ஒரு நியாயம் உண்டு. ஆனால், மண்ணை விற்று மகிழ்வதில் என்ன நியாயம் உள்ளது? சாதாரணமாக ஒன்றும் விளையாத சுண்ணாம்பு மிகுந்த சரளை மண்ணைச் சாலை அமைக்கப் பயன்படுத்துவார்கள். இப்போது சரளை கிடைக்காமல் நன்கு பயிர் விளையக்கூடிய செவ்வல் பூமியெல்லாம் சாலையாகும் கொடுமையை எங்கு போய் முறையிடுவது? இந்தியாவில் பசுமைப்புரட்சி அறிமுகமான இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - குறிப்பாக 1980-க்குப் பின்னர், பல வேறு காரணங்களினால் மானாவாரிகள் மறைந்தன. பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் மைய வேளாண்மை அமைச்சரகம் உருவான காலகட்டத்தில் - இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் - இந்தியாவின் விளைநில வரைபடம் தயாராகிப் பயிர் மண்டலங்கள் உருவாயின. முற்றிலும் வறட்சி, பகுதி வறட்சி, பாசனம் என்று விளைநிலம் தரம் பிரிக்கப்பட்டு தட்பவெப்பம், மண்ணுக்கு ஏற்ற பயிர் என்ற அடிப்படையில் பயிர்ப்பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. இந்த அடிப்படையில் வறட்சிப்பகுதிப் பயிர்களை வேறு பெயரில் சொல்வதானால் மானாவாரிப் பயிர்கள் என்று சொல்லலாம். 1951 முதல் 1970 வரை இந்தியாவின் சாகுபடித் திட்டத்தில் சுமார் 70 சதம் புஞ்சைப் பயிர்களும் பயறுவகைப் பயிர்களும் சாகுபடியாகும் மானாவாரி நிலங்களே அதிகம் இருந்தன. குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெற்ற காலம் மலையேறிவிட்டது. பருவம் தவறாமல் மழையும் பெய்தது. பத்தாண்டுத் தொகுதியில் ஓராண்டு மானாவாரி ஏமாற்றி விடும். மழைப்பொழிவு குறையும் வாய்ப்பு உண்டு. பயிர் மண்டல அடிப்படையில் சுமார் 70 சதவீத நிலம் அமைந்துள்ள மானாவாரி மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பின்னர் ஆந்திர மாநிலத்தின் மேற்குப் பகுதி, கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் அடங்கிய தக்காணப் பீடபூமி, தார்ப்பாலைவனம் அடங்கிய ராஜஸ்தானம் ஆகியவை. அத்தோடு ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களின் மாபெரும் அணைக்கட்டு வழங்கும் கால்வாய்ப் பாசனம் ஏற்படுவதற்கு முற்பட்ட சூழலில் மானாவாரிப் பயிர்களே பரவலாயிருந்தன. பயிர் மண்டலங்கள் மானாவாரி என்றும் பாசனம் என்றும் வேறுபட்டன. மானாவாரி என்பது பருவமழையை நம்பிச் செய்யப்பட்ட விவசாயம். பாசனம் என்பது உரிய பட்டத்தில் ஆறு, குளம், ஏரி, கிணறு ஆகியவற்றின் நீரையும் சேர்த்து இயங்கிய விவசாயம். உண்மையில் முற்காலப் பாசன ஆதாரங்களான ஆற்றுவெள்ளம், ஏரி, குளம் எல்லாம் பருவமழையை நம்பி இயங்கியது. இப்படிப்பட்ட பாசன நிலங்களில் நெல், கோதுமை, கரும்பு பயிராயின. அறுவடைக்குப் பின் நஞ்சையில் புஞ்சையாகப் பருப்புவகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, காராமணி, வேர்க்கடலை போன்றவற்றுடன் கேழ்வரகும், மக்காச்சோளமும் பயிராகும். சற்று அதிக பாசன வசதி இருப்பின் கோடைகால இறைவைப் பயிர்களாகவும் சாகுபடியாகும். மானாவாரியில் சோளம், கம்பு, சிறு தானியங்களான தினை, சாமை, பனிவரகு என்ற காடைக் கனி, வரகு, குதிரைவாலி ஆகியவற்றுடன் துவரை, கொள்ளு, கடுகு, எள் ஆகியவை பயிராகும். பசுமைப்புரட்சியின் முன்னோட்டமாக மாபெரும் அணைக்கட்டு திட்டங்கள் 1950 - 60 காலகட்டத்தில் உருப்பெற்று கால்வாய்ப் பாசனம் மானாவாரி நிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஒரு பகுதி புஞ்சை நிலங்கள் நஞ்சையானபோது வடமாநிலங்களில் பருப்பு சாகுபடியும், தானிய சாகுபடியும் குறிப்பாக கம்பு, இயல்பாக வளரக்கூடிய தீவனப் புற்கள் ஆகியவை மறைந்தன. நெல் சாகுபடி அறிமுகமானது. ÷வடமாநிலங்களில் பருப்பும், புஞ்சை தானியங்களும், தீவனப் புற்களும் விளைந்த இடங்களில் ஆற்று நீர்க்கால்வாய்கள் வந்ததும் நெல், கோதுமை, மக்காச்சோளம் பயிரிட்டுப் பயிர் மண்டலத் திட்டமே மாற்றப்பட்டது. பொதுவாக, இன்று நெல் விளையும் மேற்கு உ.பி., பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மக்கள் கோதுமையையே முழு உணவாக உண்பார்கள். மலைப்பகுதிகளில் சிறப்புமிக்க பாசுமதி நெல் விளையும். உதாரணமாக,டேராடூன், சிம்லா, ஹிமாசலப் பிரதேசம், பாகிஸ்தானை ஒட்டிய சிந்து நதியின் மையப்பகுதிகளில் பாசுமதி நெல் சாகுபடி குறைந்த நீர் செலவில் பயிராகும். பிரியாணிக்கு மட்டுமே பாசுமதி அரிசி பயனாகும். அன்றாட உணவுத்திட்டத்தில் அரிசி கிடையாது. இம்மக்கள் அதிகமாகப் பருப்புவகைகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால், இன்று அரசின் கொள்முதல் திட்டத்துக்காக மோட்டா ரக நெல் சாகுபடி செய்வதுடன், அவர்களுக்கு நெல் முக்கிய வணிகப்பயிராகிவிட்டது. உபரி வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் விற்றுவிடுவார்கள். இதனால் அங்குள்ள பயிர்த்திட்டம் மாறி புஞ்சை - மானாவாரி பலம் இழந்தது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 1970-வரை இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிணறுகளில் ஏற்றம், கமலை தென்பட்டன. தமிழ்நாட்டில் நீர்ச்செலவு அதிகமுள்ள நெல்லும் கரும்பும் மெல்ல மெல்ல பழைய மானாவாரி நிலங்களை ஆக்கிரமித்தன. வடதமிழ்நாட்டில் குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஏரி நீர்ப்பாசனமும், கிணற்று நீர்ப்பாசனமும் விளங்கி வந்தன. நீர்ச் செலவுள்ள பயிர் சாகுபடித் திட்டத்தில் கரும்பும் நெல்லும் பெற்ற முக்கியத்துவத்தினால் முதலில் பம்ப் செட் வந்தது. மேல்மட்ட நீர் கிடைக்காதபட்சத்தில் ஆழ்துளைக் கிணறுகள் வந்தன. தஞ்சை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அறிமுகமாயின. ஏரிநீர் ஆழ்துளைக் குழாய்களுக்கு ரீசார்ஜ் ஆனதால் மானாவாரி நிலங்களில் முன்பு பயிரான புஞ்சை தானியங்களும், பருப்பு வகைப் பயிர்களும் வழக்கொழிந்தன. மானாவாரி ஏரிகள் சுத்தமாக வறண்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. இந்தக் காலகட்டத்தில் மற்றுமொரு நிகழ்ச்சியும் டென்மார்க் உதவியுடன் நிகழ்ந்தது. சமூகக்காடு வளர்ப்பு என்ற போர்வையில் மானாவாரி ஏரிகளில் கருவேல மரங்களை நட்டார்கள். ஏரிகளைச் செப்பனிட்டு நீர்வரத்துப் பகுதிகளில் புற்களை வளர்த்து - நீர்வரத்துக் கால்வாய்களைத் தூரெடுத்து, ஏரிகளின் கரைகளில் மரங்களை நடுவது நல்ல திட்டம். ஆனால், முதல்கட்டமாக ஏரியிலேயே மரம் நட்டு அதன் விளைவாய் ஏரி தூர்ந்தவுடன் ப்ளாட் போட நல்ல வசதியை டென்மார்க் - டேனிஷ் ப்ராஜக்ட். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்து வழிகாட்டியுள்ளது. மானாவாரி நிலங்கள் மாயமாய் மறைந்து முழுக்க முழுக்கப் பாசனத்தையே நம்பிச் செய்யப்பட்டு வரும் விவசாயத்தில் அரிசி உற்பத்தியும் சர்க்கரை உற்பத்தியும் உயர்ந்திருக்கலாம். சத்து மிகுந்த உணவு உற்பத்தி மறைந்து நோய்க்குறியுள்ள உணவு உற்பத்தி முடுக்கிவிடப்பட்டது. மூன்றாவதாக, மக்காச்சோள சாகுபடி. மிகவும் சத்து நிரம்பிய இருங்குச்சோளம், வெள்ளைச்சோளம் பயிரான நிலங்களில் இன்று மக்காச்சோளம் காட்சி தருகிறது. மக்காச்சோளம் மாட்டுக்கும் கோழிக்கும் மட்டுமல்ல. பல கலப்படங்களுக்கு வித்து. பழங்கள் விளையாத அமெரிக்காவில் சிந்தட்டிக் ஸ்க்வாஷ் பிரபலம். மக்காச்சோள மாவு ஸ்டார்ச்சில் கந்தக அமிலத்தைக் கொட்டி செயற்கைப் புரதம், சர்க்கரை சேர்த்து ஆரஞ்சு வாசனைத்தூள் தூவி ""ஜிங்கோ'', ""பிங்கோ'' என்று பெயர்வைத்து நமக்கு இறக்குமதி செய்வார்கள். அதை ஆஹா, ஓஹோவென்று அதிக விலை கொடுத்து வாங்கும் இந்திய நடுத்தர வர்க்கம் புற்றுநோயையும் இதய நோயையும் விலைகொடுத்து வாங்குகிறது. நம்மிடம் எலுமிச்சை, திராட்சை, நன்னாரி, நெல்லிக்காய், தர்பூஸ், மாம்பழம் என்று கணக்கில்லாத ரகங்கள் உள்ளனவே. மானாவாரி சாகுபடி மறைந்துவிட்டதால், துவரை, வேர்க்கடலை, உளுந்து, பாசிப்பயறு போன்ற உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது. உண்மையில் வேர்க்கடலை, பருப்புவகையாகும். அதாவது லெக்யூம்ஸ் என்பார்கள். பொதுவாக தானியப் பயிர்கள் அறுவடையானதும் லெக்யூம்ஸ் பயிர்களைச் சாகுபடி செய்துவிட்டு மீண்டும் நெல், கேப்பை, கோதுமை பயிராகும்போது 50 சதம் தழைச்சத்து செலவில்லாமல் கிட்டும். அந்த அளவில் பருப்புவகைப் பயிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை வேரில் சேமிக்கும். பருப்பு விதைகளை ரைசோபியம் நுண்ணுயிரிக் கலவையில் நேர்த்தி செய்து விதைத்தால் பருப்பு விளைச்சலும் கூடுதலாகும். நமது முன்னோர்கள் கடைப்பிடித்த பயிர்ச்சுழற்சி மானாவாரி நிலங்களில் மட்டுமல்ல, பாசன நிலங்களிலும் உண்டு. இறுதியாக ஒரு விஷயம். நம்ம ஊர்மக்கள் சாம்பார் பிரியர்களாக இருக்கலாம். சாம்பாருக்குத் துவரம்பருப்பு வேண்டும். முன்பு சாம்பாரில் கடலைமாவு கலப்படம் செய்வார்கள். கடலைமாவில்கூட பட்டாணி மாவு கலந்திருக்கும். துவரையைவிட கடலைப்பருப்பு விலை மலிவு. அதைவிடப் பட்டாணி இன்னமும் மலிவு. இப்போது கலப்படப் பருப்புகளும் விலையேறிவிட்டது. பட்டாணிமாவைவிட விலை மலிவான மக்காச்சோள மாவு கலப்படம் பெருகிவிட்டது. அது மஞ்சள் நிறத்தில் உள்ளதால் கலந்தால் தெரியாது. மாடும் மனிதனும் ஒன்றாகிவிட்ட நிலை இன்று! மக்காச்சோள மாவைத் தவிட்டுடன் பிசைந்து கறவைப்பசுக்களுக்கு வழங்குவது உண்டு. கையேந்தி பவன் தொடங்கி கந்தவிலாஸ் ஓட்டல் வரை சாம்பாரில் மக்காச்சோள மாவு கலந்திருக்கும் வாய்ப்பு உண்டு. நல்ல மணமான துவரம்பருப்பில் ருசியான சாம்பார் தினமும் வேண்டும் என்றால், மீண்டும் மானாவாரிச் சாகுபடியை ஊக்குவிப்பதுதான் வழி. இது அரசின் கடமை என்பதைப் பொறுப்புள்ள ஆட்சித் தலைவர்களும் உணர்ந்து, ஆக்கபூர்வமாக நல்ல சத்துள்ள புஞ்சைத் தானியம் மற்றும் பருப்பு சாகுபடிக்குப் புத்தூக்கம் நல்குவது, நாட்டு மக்களுக்கு நல்லது. thanks for thinamany & ஆர்.எஸ். நாராயணன்

7 comments:

  1. நல்ல அருமையான கட்டுரையை தேர்வு செய்து பதிந்துள்ளீர்கள்.

    விவசாய நிலங்கள் இப்போது மணைகளாக விற்கப்படுகிறது.

    மக்கள் வீடு கட்டி தங்கப்போகும் இடத்துக்கு விலை அதிகம், மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான தானியங்கள் தரும் நிலத்துக்கு விலை மிக மிக குறை.. வேதனையான விசையம்.

    மானாவாரி சாகுபடி பற்றி ஒரு காலத்தில் திருச்சி ரேடியோவில் அதிகாலை நேரத்தில் கேட்டது ஞாபகத்தில் உள்ளது. இப்போது மக்களிடம் ரேடியோவில் விவசாய செய்திகளின் கேட்பது மிக மிக அறிது.

    கட்டுரையில் இறுதி 15 வரிகள் நல்ல சூடு போட்டது போல் உள்ளது.

    நன்றி சாஹூல் காக்கா

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ,
    எனக்கு விவசாயத்தில் கொஞ்சம் ஆர்வம் உண்டு , விவசாயத்தை பற்றி கட்டுரை எழுதமுடியா விட்டாலும் நல்ல கட்டுரைகளாக பார்த்து பதிகின்றேன்

    ReplyDelete
  3. கருவேல மரங்கள் காற்றில் இருக்கும் இரபதத்தை குடித்து உயிர் வாழகுடியவை சுற்றுசுழல்க்கு மிக கேடு விளைவிக்க கூடிய இந்த திட்டத்தை இந்திய அரசு ரஷ்ய அரசுடன் சேர்ந்து செய்தது என்று நினைத்துகொண்டேன் தகவலுக்கு நன்றி ...

    /அமெரிக்காவில் சிந்தட்டிக் ஸ்க்வாஷ் பிரபலம். மக்காச்சோள மாவு ஸ்டார்ச்சில் கந்தக அமிலத்தைக் கொட்டி செயற்கைப் புரதம், சர்க்கரை சேர்த்து ஆரஞ்சு வாசனைத்தூள் தூவி ""ஜிங்கோ'', ""பிங்கோ'' என்று பெயர்வைத்து நமக்கு இறக்குமதி செய்வார்கள்.//
    Rusna, Tang, Milo போன்ற குளிர்பானங்களில் மிது பைத்தியம் பிடித்திருக்கும் நமது ஊர் பெண்கள் இந்த பதிவை படிக்க வேண்டும் .... இப்பொது எல்லாம் வெளி நாட்டுளிருந்து ஊர் செல்லும் நமது சகோதர்கள் சொந்தகார விட்டுக்கு போனால் எங்கே Tang குடுதுவிடுவர்களோ என பயந்து சொந்தகார விட்டுக்கு எல்லாம் போறதே இல்லையாம்..எனது அநேக சொந்தகார விட்டிலும் இந்த Tang பழக்கம் உள்ளது சுபுஹு
    தொழுதுவிட்டு போனாலும் சரி இஷா தொழுதுவிட்டு போனாலும் சரி Tangதான் என்னத்த சொல்லுறது போங்க

    ReplyDelete
  4. எனது நண்பன் சொன்னது ,
    அந்தபெண்ணை நான் கல்யாணம் செய்யமாடேன்

    நான் ஏன்டா

    நாண்பன் சொன்னது மழைய இருத்தலும் tang தான் வெய்ல இருத்தலும் tang தான் என்றான்
    இது உண்மயில் நடந்த உரையாடல்


    வருகைக்கு நன்றி diary அவர்களே

    ReplyDelete
  5. This is wonderful article. this article is reflecting some of my recent thoughts about Natural way of Agriculture.

    ZAKIR HUSSAIN

    ReplyDelete
  6. Zakir Hussain

    தாங்கள் வருகைக்கு நன்றி

    shahulhameed

    ReplyDelete
  7. அருமையான பதிவு காக்கா...

    ReplyDelete

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP