Powered by Blogger.

Monday, 21 June 2010

காடு வளர்ப்போம்!

தவறான வேளாண் சாகுபடி நுட்பங்கள், ரசாயன இடுபொருள்கள் தவிர பயிர் சாகுபடித் திட்டம் எனப் பல்வேறு அதிரடித் திட்டங்கள் மூலம் 1950-களில் விவசாயத்தில் வெற்றி காணச் செய்த முயற்சியின் விளைவு, சுற்றுச்சூழல் பாழ்பட்டுப்போய் விளையும் மண்ணே நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது.




இந்த நிலையிலாவது நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், இன்னும் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பயிரினங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காது, உணவுப் பொருள் உற்பத்தி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் குறைந்து போவதோடு, நச்சுத்தன்மை மிகுந்ததாகவும் இருக்கும்.



தட்பவெட்ப நிலை மாறுபாடு ஏற்பட்டு பூமியில் பிரளயம் நிகழும். நாம் எதிர்கொள்ளவிருக்கும் இந்தச் சீர்கேடுகளையும், பேரழிவினையும் தடுக்க ஒரே வழி மரம் வளர்ப்பதுதான். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல; வனம் வனமாய், தோப்புத் தோப்பாய் காணும் இடமெல்லாம் பச்சைப் போர்வை படரச் செய்ய வேண்டும்.



மொத்தமுள்ள நிலப்பரப்பில் 3-ல் ஒரு பங்கு மரங்களும், செடி கொடிகளும் சூழ்ந்த தாவரப் போர்வையாக இருக்க வேண்டும். நம் நாட்டில் இப்போது 5-ல் ஒரு பங்குகூட தாவரப் போர்வை இல்லை. பசுமை இல்லை. வனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டதன் விளைவுதான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் வெப்பக்கொடுமை. முடிவு வறட்சி, பசி, பட்டினி, அழிவு.



÷மனித சமூகத்துக்கு இயற்கை கொடையாக வழங்கிய தாவரப் போர்வை அவரவரின் சுயநலப் போக்குக்காக அழிக்கப்பட்டது. அதன்மூலம் பொருளாதார ரீதியாக நொறுங்கிவிட்ட வேளாண்மையின் செயல்பாடுகள் குழம்பிப் போய்விட்டன.



தாவரப் போர்வை நிலத்தில் இருந்தால், தாவரப் பொருள்களுடன் அங்குள்ள உயிரினக் கழிவுகளும் ஒன்று சேர்ந்து மண்ணை வளமாக்குவதுடன், மண் புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்களின் இயக்கத்தால் மண் இறுக்கம் தளர்ந்து இளக்கமாகிறது. அதன்மூலம் மழைநீர் நிலத்தினுள் முழுமையாக ஊடுருவ முடிகிறது.



இந்த இயற்கை நிகழ்வுகளை நாம் அழித்துவிட்டதால் பெய்யும் மழைநீர் வளமான மண்ணையும் அரித்துக் கொண்டு விரைந்தோடி கடலில் கலந்து விடுகிறது. அதனால், மண் வளத்தை இழப்பதோடு, நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே போகிறது.



கூட்டம் கூட்டமாய் மரம் வளர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு. வறண்ட இடத்தில்கூட வளம் சேர்க்க மரங்களால் மட்டுமே முடியும். சில இன மரங்கள் மண் ஈரத்தையும், மழை நீரையும் விரும்புவதில்லை. ஏனெனில், அந்த மரங்கள் நிலத்தடி நீரை மட்டுமே விரும்பும். அதனால், நிலத்தடி நீரைத் தேடி கடினமான பூமியாயிருப்பினும் அந்த மரங்களின் பலம் மிகுந்த வேர்கள் பூமிக்கடியில் போய் நிலத்தடி நீரை மேலே கொண்டு வந்து விடும்.



இன்னும் சில மரங்கள் பூமிக்குள் ஆழமாக வேரோடு உள்ளே புகுந்துபோய், நிலத்தடி நீரையே தொட்டு விடும். இதன்மூலம், பல நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நீரைக்கூட தனது ஈர்ப்பு விசை மூலம் இழுத்து அந்த இடத்தில் மேலும் மரங்கள் வளர்வதற்கு உதவும்.



இப்படித்தான் தாவரங்கள் பெருகி பல்லுயிர் பெருக்கம் ஏற்பட்டு, மாசற்ற சுற்றுப்புற மண்டலம் உருவாகிறது. இந்தச் சுற்றுப்புற மண்டலத்தை மையமாகக் கொண்டுதான் உயிர் மண்டலம் உருவாகிறது. இப்படி இயற்கையிலேயே உள்ள உயிரினத்தை வாழவைக்கும் மரங்களை இனியாவது வளர்க்க வேண்டும்.



அழிப்பதை நிறுத்திவிட்டு, மரங்களை வளர்க்க வேண்டும். ஏனெனில், இயற்கை தேர்வின் மூலம் இயற்கையாக விதைகள் தானாக விழுந்து முளைத்து, இலையாகி, செடியாகி, மரமாகி வளர்ந்து பயன்தர பல ஆண்டுகள் ஆகும். அதுவரை காத்திருக்காமல் உடனே தாமே முனைந்து திட்டமிட்டு காடுகள் வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.



அப்படித் திட்டமிட்ட இயற்கை வன வளத்தை தாவரப் போர்வையாக உருவாக்க முனையும்போது, ஒளி ஈர்க்கும் தாவரங்கள், மித ஒளி ஈர்க்கும் தாவரங்கள், வெயிலைச் சமாளிக்கும் தாவரங்கள், நிழலை விரும்பும் தாவரங்கள் மற்றும் குத்துச்செடிகள், கொடிகள் எனத் தேர்வு செய்ய வேண்டும்.



இந்தத் தாவரங்களை முதன்மைத் தாவரங்கள், ஆதாரத் தாவரங்கள், 2-ஆம் நிலைத் தாவரங்கள், சிறந்த தாவரங்கள் என 4 வகைகளாகப் பிரிக்கலாம்.



÷இந்தத் தாவர வகைகள் மண் தன்மை, மண் வளம், தட்ப வெட்பநிலை, கடல் மட்டம், சுற்றுப்புற உயிரின மற்றும் மனித இயக்கம் உயிரின பன்முகத்துக்கான தொடர் நிலைகள் ஆகிய காரண காரியங்களின் அடிப்படையில், தாவரப் போர்வையின் உயரம், வளர்ச்சிப் பெருக்கம் மற்றும் குற்று இனங்களைக் கண்டறிந்து, திட்டமிட்டு அவற்றின் சார்பு மற்றும் தோழமைத் தாவரங்களை உருவாக்கினால் 10 ஆண்டுகளில் 10 ஏக்கரில் விளைந்து கிடைக்கும் பயன்களை 4 ஏக்கரில் பெற முடியும்.



அண்மை ஆண்டுகளில் வனங்கள் மிக வேகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், சாலை மேம்பாட்டுக்காகக் கணக்கில் அடங்காத மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. அழிக்கப்படும் மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நடப்படுவதில்லை. உச்ச நீதிமன்றம் சாலை மேம்பாட்டுக்காக வெட்டப்படும் ஒரு மரத்துக்குப் பதிலாக 10 மரக் கன்றுகளை நடவேண்டுமென்று உத்தரவிட்டது.



இந்த உத்தரவு எத்தனை இடங்களில் பின்பற்றப்படுகிறது என்பது சந்தேகமே. எனவே, வன மரங்களை அழிப்பதைத் தவிர்த்து, மரம் வளர்ப்பில் ஈடுபட்டு, நாட்டுக்குப் பசுமை சேர்த்து, வீட்டுக்கு வளத்தைச் சேர்க்கலாம்.
 
 
ஆர். தங்கராஜு
 
நன்றி தினமணி

3 comments:

  1. அருமையான பதிவு நண்பரே..

    ReplyDelete
  2. அருமையான பதிவு நண்பரே..

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி சகோதரர் ரியாஸ் அவர்களே

    ReplyDelete

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP