Powered by Blogger.

Saturday 13 October, 2012

பயண அனுபவம்

பயணத் தொடர் – பயண அனுபவம் என்றெல்லாம் ஏராளமாக வாசித்து இருக்கிறேன் தொடர்ந்து ஆங்காங்கே வாசித்தும் வருகிறேன். ஆனால், ஒருநாள் கூட இப்படி ஒரு விபரீதமான எண்ணம் வந்ததே இல்லை இந்த அதிரைநிருபர் தளத்தில் தொட்டதெல்லாம் ஸாரி தட்டியதெல்லாம் துலங்கும் தூண்டில்கள் ஏராளம் போடப்பட்டிருப்பது அதில் சிக்கியவர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த அற்புதமான சூழல்களை ஆனந்தமாக அனுபவித்து வருவார்கள்.

என்னைப் பொறுத்த மட்டில் ஊர்களைச் சுற்றும் ஒருவனாக(!!?) நான் இல்லாவிட்டாலும் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த சுவடுகளை அப்படியே மனத்தளவிலும் எனது மூன்றாம் கண்கள் ஊடேயும் சேமிப்பதில் தவறுவதில்லை. அவ்வாறு நாம் மட்டுமே சேமித்து அதனை பாதுகாப்பதில் என்ன பயன் !? என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அதிரைநிருபர் போன்ற சிறப்பான மேடையுடன் கணினித் திரையில் கண்கொள்ளாக் காட்சிகள் படைக்கும் தளம் இருக்கவே இருக்கிறது நாம் கடைபோட என்று இங்கேயும் கடைவிரித்து விட்டேன்… வியாபர நோக்கில் அல்ல !


சென்ற முறை நான் ஊர் சென்ற போது ஒரு சிம் கார்டு (ஜிம் கார்டு என்போரும் ஜெல் போனில் பேசுகிறார்கள்) வாங்கினேன்.

அது லைஃ ப் கார்டு என்று சொல்லித் தலையில் கட்டியிருந்தார்கள், இந்த முறை (நான்கு மாதம் கழித்து) ஊர் சென்றதும் திருச்சி ஏர்போர்டில் ஜிம்மை அதாங்க, சாரி சிம்மை மாட்டினால் சிம்(முன்னு) பல் இளித்து விட்டது (கோபால் பல்பொடி எங்கே என்று). சிம்முக்கு லைஃப் என்றாலே நான்கே மாதம்தான் என்று அவர் கையில் அடித்துச் சொல்லாத அர்த்தமும் புரிந்தது. நான் நம்முடைய லைஃப் (வரைக்கும் உள்ள) கார்டு என்று நினைத்தது தவறு என்றும் புரிந்து கொண்டேன். வண்ணத்துப்பூச்சிக்கு வாழ்நாள் 21 நாள்தான் என்று படித்தது நினைவு வந்தது (harmys please confirm). அதே போல் சிம்முக்கு நாலுமாதம்தான் லைஃப் போலிருக்கிறது என்று மனதை தேற்றிக்கொண்டேன்.





திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து அதிரைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக சிம்(முஞ்சி) கார்டு வாங்கிய கடைக்கு சென்று கேட்டால், அவரும் கூலாக “வேற ஒன்னு வாங்கிப் போடுங்க காக்கா” என்று கடைக்காரர் சொன்னார். (அடிக்கடி சிம் மாற்றுவதற்கு அசத்தல் காக்காவிற்கு யார் பதில் சொல்வதாம்) சரி பயணங்கள் எல்லாமே இனிப்பதில்லையே இளிக்கவும் செய்யுமே (அனுபவம்தான்) என்று வேறொரு சிம்(மு) கார்டு வாங்கிக் கொண்டுதான் வீட்டுக்குள்ளேயே நுழைந்தேன். நம் நாட்டில் (அட! நம்ம இந்தியாவில்) பத்து பைசா இருபது பைசா முப்பது பைசாக்களெல்லாம் பயன்படுவது மொபைல் ஃபோனில் மட்டும்தான். வேறு எங்கும் இந்த பைசாகளுக்கு மதிப்பு கிடையாது.





ஊரில் பொறடியை சொறிந்துகொண்டு சுகம் விசாரிக்க வருபவர்கள் கூட ஒரு மினிமம் கலெக்ஷன் காஸ்ட் என்று வைத்து இருக்கிறார்கள் (ஆளை பொறுத்து அவர்கள் டார்கெட் மாறும்). ஒரு ரூபாய் கொடுத்தால் அதை திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு நம்மிடமே தந்து விடுகிறார்கள்.(தூக்கி வீசாத குறைதான்). ஆனால், ஃபோன் ரொம்ப சீப்பாக இருப்பதால் யாரும் போனில் பேசும்போது விசயத்தை சுருங்க சொல்வதில்லை கம்பனுக்காக அகல இரயில் பாதைக்கு போட்ட பட்ஜெட் ஒதுக்கீடு போல் நீட்டி, அளந்து, முழக்கியோ நம் நேரத்தையும் வீணாக்கி விடுகின்றனர்.





இந்தியாவில் மொபைல் போனுக்கு கட்டணத்தை அதிகரிக்க வேண்டும், யாரை பார்த்தாலும் ஃபோன் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள். பேசுவது எல்லாம் வெட்டி பேச்சுக்கள், குறிப்பாக பகல் நேரங்களில் நெட் ஒர்க் பிசிபிசி என்று வரும். காரணம் பலவீடுகளில் சமையல் ரெசிபியை செல்போன்கள்தான் ஒலிபரப்புகின்றன. வெந்தயம் போட்டியா? கறிவேப்பிலையை கிள்ளிப்போடு – புளியை கடைசியில் ஊத்து தேங்காய் பால் தலைப்பால் ஊத்தணும் என்பதுதான் அந்த நேரங்களின் பிசிக்கு காரணம். நல்லவேளை சுவையும் மனமும் மொபைலில் அறிய முடியாமல் போனது

இதை ஏன் கேட்கிறீங்க இங்கே மேலே பாருங்க பைக்கில் போகும் போதும் தலை சோல்டரில் கவிழ்ந்து கிடக்குது. இரச்சிகடையில இருக்கிற தலை மாதிரி !? தோள்பட்டைக்கும் தலைக்கும் இடையே ஃபோன் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி அவஸ்த்தைப்படுகிறது. மொபைல் ஃபோனை கண்டு பிடித்தவன் கூட இப்படி எல்லாம் வைத்துக்கொண்டு பேசுவார்கள் என்று கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார். சலூனில் ஷேவிங்க் பண்ணும்போது ஒருகையில் பிளேடு மாட்டிய கத்தி, மறு கையில் செல்போன் – அதுவும் ஃபோனில் யாரோடும் அவர் கோபமாக கையை அசைத்து அசைத்து பேசும்போது கத்தி கத்தி (என்று) சொன்னாலும் ஃபோனில் போடும் சண்டை எல்லாம் நினைவில் வந்து போகின்றது.






அத்துடன் மொபைல் ஃபோனைவைத்து ஃபோட்டோ எடுக்கும் பழக்கமும்(!!?) அதிகரித்துவிட்டது (எனக்கு போட்டியாக !!). முன்பெல்லாம் சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல நேரிட்டால்தான் அந்த இடங்களை அங்கே செய்யும் சேட்டைகள் அல்லது மறக்கவியலாத சூழலை ஃபோட்டோ எடுப்பார்கள். ஆனால் இப்போ எந்தந்த வலைத்தளங்களில் பதியலாம் என்று அயர்ந்து உரங்கும் பூனையிலிருந்து அடுப்பங்கரையில் ரெடியாகும் வட்டிலப்பம் வரையில் படமெடுக்க மொபைல் ஃபோன். என்ன்ங்க இப்போது வீட்டில் கொல்லையில் வாழைமரம் குலைபோட்டால் போட்டோ, முருங்கை மரம் காய் காய்த்தால் போட்டோ. மசுக்குட்டியைக்கூட மொபைலில் போட்டோ எடுக்கிறார்கள். இதல்லாமல் மொபைல் படக் கலை என்று யாரும் பேரு வச்சுடாதீங்க ! இதுல வாய்ஸ் ரெகார்ட் வேறு அல்லோலப்படுகின்றது.





அடுத்துதாக யாரை பார்த்தாலும் மொபைல் போனுக்கு அடுத்ததாக கையில் இருப்பது லேஅவுட். கண்ணில் பட்டவரை முதலில் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று தப்பித்தவறி கேட்டுவிடக் கூடாது அப்படி கேட்டு விட்டால் அதன் பிறகு கையில் உள்ள லே அவுட் தான் பேசும். “நான்” என்று ஆரம்பிக்கும் அவர் என்ன பொம்புளை புள்ளையை பெத்துகிட்டு இன்னும் மனை வாங்காமல் இருக்கிறீர்கள் என்ற அதிரையின் அக்கறைகள் வார்த்தைகளில் தெறித்து வரும். இவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டால் நாம்தான் அடுத்த மைசூர் மகாராஜா என்பதுபோல் ஒரு மாயபிம்பம் மனதில் ஓடும். அடுத்த இலக்கு கொட நாடுதான் என்ற பின்னி திரை விரியும். கழுகுக்கு மூக்கில் வியர்ப்பதுபோல் வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் இவர்களுக்கு வியர்த்துவிடும். இன்னும் சொல்லப் போனால் நாம் இங்கு டிக்கெட் எடுப்பதற்கு முன் அவர்களுக்கு நம் வருகை தெரிந்து விடுகின்றது . உப்பளத்தில் விளைவது உப்பு என்று மட்டும் உள்ளூரில் பிறந்த நமக்கு தெரியாவிட்டால் அதை எல்லாம் கூட வளம் கொழிக்கும் பூமி என்று நம் உச்சந்தலையில் வைத்துக் கட்டிவிடுவார்கள்.





இப்போது இந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு விகிதாச்சாரம் ஆண்களை விட கூடுதலாகி விட்டது இவர்களும் களத்தில் இறங்கி அடுப்பங்கரை வரை வந்து ஆசைகாட்டும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள். உடல் உழைப்பு இல்லாமல் தூக்கினார் போல வரும் ஒரு பெரும்தொகை கமிசன் என்று கைமாறுகிறது. ஆனால் இவர்கள் எல்லோரிடமும் காணப்படும் பொதுவான அம்சம் வாங்க “தம்பி டீ குடிக்கலாம்” என்று வலிய உபசரித்து அழைப்பார்கள். கடைசியில் காசு நாம்தான் அழுதாக வேண்டும். சில சமயம் ஒரு டீலிங்குக்குப் பின்னால் ஓன்பது பேர் இருக்கிறார்கள். பத்திரம் முடிந்ததும் பழைய நாகரத்தினம் சார் வீட்டு வாசலில் நின்று எல்லோருக்கும் ஆளுக்குக் கொஞ்சம் என்று பிரித்துக்கொண்டு “கொடுவாப்பிசுக்கு” வாங்கப் போய்விடுவார்கள். சொத்து விற்பவரும் வாங்குபவரும் கொடுவாபிசுக்கு வாங்கும் முன்னும் பின்னும் யோசிக்கின்றார்கள் ஆனால் இந்த ப்ரோகேர்கள் வீட்டில் தினமும் கொடுவா பிசுக்குதான். கொஞ்சம் கூடுதல் நேரம் இது போன்ற புரோக்கரிடம் பேசினால் நம் மூளை கொதித்து காது வழியாக வழிந்து வந்து விடும்.





ஊருக்கு சென்று வருபவர்கள் உங்களின் ஆறாவது அல்லது இப்போது புதிதாக சொல்கிறார்களே ஏழாவது அறிவை பயன்படுத்தி, மாலை வேளைகளில் இப்படிக் கூட்டம் கூட்டமாக மெயின் ரோட்டில் நின்று அதுவும் ஒரு பைக் போகக்கூட இடம் இல்லாமல்- பேட்டரி தீரும்வரை ஹாரன் அடித்தாலும் நகராமல் ஆணி அடித்தது போல் நின்று என்னதான் பேசுகிறார்கள் என்று யாராவது சொல்லுங்கள். குறிப்பாக பழைய அண்ணாசிலை, தைக்கால் ரோடு முக்கத்தில் இருந்து, பழைய போஸ்டாபீஸ்களும் ரோடுவரை இந்தக் கூட்டம் நின்று பேசிக் கொண்டே இருக்கிறது. இந்த சாயங்கால சட்டசபை கலைக்கப்பட்டால்தான் அந்த இடங்களில் நடக்கும் பைக் சறுக்கல்களும் விபத்துக்க தவிர்க்கப்படும்.





ஒருநாள் பட்டுக்கோட்டை போய் இருக்கும்போது பைக் ரிப்பேர் ஆகிவிட்டது. ஸ்பேர் கிடைக்கவில்லை. தஞ்சையில் இருந்து வாங்கி மாட்டி அடுத்தநாள் தருவதாக மெக்கானிக் கூறிவிட்டார். சரி என்று ஒண்ணாம் நம்பர் பஸ்சில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது இரு நடுத்தர வயது நண்பர்கள் பேசிக்கொண்டு வந்ததை கேட்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பேசியதில் சில வார்த்தைகள் எனக்கு விளங்கவில்லை. இதைப்படிக்கும் யாராவது “தலைக்குமேல் தொட்டிருக்கும் அடைப்புக்குள்” இருக்கும் வார்த்தைகளை விளங்கினால் சொல்லுங்கள்.





•என்னப்பா ஆயிரம் ரூபா கைமாத்துக் கேட்டேன் ஒன்னும் சொல்லாமல் இப்படி “பாளிஸ்டரா” ஒதுங்கிட்டியே!

•இங்கிருந்து மல்லிபட்டினம் எத்தனை “கிலோ மீட்டு?”

•ஹோட்டல் வேலை என்றால் நிறைய “கிப்ஸ்” கிடைக்கும்னு சொல்றாங்களே! ஆனலும் வேண்டாம் என்று அவன் “பெட்ரோல் பேங்க்கிலே “ வேலை செய்யுறான்.

•நேற்று ராத்திரி வீட்டில் சிக்கன் “ஸ்பிரே.”யோட ஹாப் பாய்ளும்

•என்னப்பா உங்க அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் ஏதோ தகராறு என்கிறார்களே யாராவது ஒருவர் "காம்போசிஷன் " செய்து வச்சா என்ன?





அடுத்து ஒருநாள் முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை வரும் வழியில் தாலுக்கா அலுவலகம் அருகே வரும்போது ஒரு வாலிபர் லிஃப்ட் கேட்டார்.





நானும் பைக்கை நிறுத்தி “எங்கு போகணும் என்று கேட்டேன்”.





“ராஜாமடம் போகணும்” என்றார். நான் அதிரை போகின்றேன் அங்கே இறக்கி விடாவா?” என்றேன்.





“சரி” என்று சொல்லி பைக்கில் ஏறி அமர்ந்தவரிடம்…





“எங்கு வேலை செய்கின்றிர்கள்?” என்றேன்.





“வேலைக்குத் தான் இண்டர்வியூ வந்து விட்டு போகிறேன்” என்றார்.





நானும் விடாமல் “என்ன வேலை?” என்றேன்.





அவரும் இறுக்கமாகச் சொன்னார் “தலையாரி வேலைக்கு 30 ஆட்கள் தேவையாம், மொத்தம் 230 பேர்கள் இண்டர்வியூ வந்தார்கள்” என்றார் .





நனோ “படிப்பு தகுதி என்னவாம்?” என்றேன்.





“பத்தாம் வகுப்பு தேறி இருக்க வேண்டும்” என்றவர் தொடர்ந்து “நான் எம்ப்லாய்மெண்ட் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தேன் அங்கிருந்துதான் எனக்கு கடிதம் அனுப்பி இங்கு வரச்சொல்லி இருந்தார்கள்” என்றார்.





நம் ஊரில் மோட்டார் சைக்கிள் இல்லாத வீடே கிடையாது. ஆனால், படித்த யாரும் இதுபோல் எம்ப்லாய்மெண்ட் அலுவலகத்தில் எண்ணிக்கை எடுக்கும் அளாவுக்கு கூட பதிவு செய்து இருப்பதாக தெரியவில்லை.





தலையாரி என்றதும் என் நினைவுக்கு வந்தது இந்தியாவில் அடிமைத்தனம் தொடங்கும் இடம் இந்த V.A.O அலுவலகம்தான். இங்கு பார்த்தால் ஒரு பாழடைந்த டேபிள் (வெள்ளைக்காரன் விட்டு விட்டுப் போனதா?) ஒரு ஓட்டை நாற்காலி அதுவும் காலுக்கு பல சப்போர்ட் கொடுத்து ரீ-ப்பேர் பலகை அடித்து இருக்கும். இதில் தான் V .A .O . அமர்ந்து இருப்பார் அவருக்கு உதவியாக இரண்டு தலையாரிகள் தரையில்தான் அமர்ந்து இருக்க வேண்டும். இவர்கள் தரையில் உட்கார்ந்த இடத்தை பார்த்தால் தலைக்கு தேய்த்த எண்ணை சுவற்றில் ஒட்டி, ஒட்டி தலை சைசுக்கு பலவித அஜந்தா ஓவியங்களை காணலாம் . V .A .O இல்லாத நேரத்தில் இந்த தலையாரிகளின் அல்லபறை பேச்சு இருக்கே அது I A S . I P S . ரேஞ்சுக்கு இருக்கும் என்பது வேறு விசயம். சரி விசயத்திற்கு போவோம் .





நானும் தொடர்ந்து விடாமல் “இண்டர்வியூவில் என்ன கேள்வி கேட்டார்கள் என்றேன்.”





அவரோ “கல்லணையை கட்டியது யார்? தஞ்சை பெரிய கோயிலை கட்டியது யார்? (ஆகா சூப்பர் கேள்வி)” என்றார்





அட! நானோ “என்னது ஒன்றாம் இரண்டாம் வகுப்பில் கேட்கும் கேள்வியல்லவா என்றேன்.”





அதற்கு அவர் “ஆமாம் ஆனால் கடைசி கேள்விக்கு மட்டும் என்னால் மட்டும் அல்ல அங்கு வந்த அனைவராலும் பதில் சொல்ல முடியவில்லை” என்றார்.





விழி தூக்கி ஸாரி புருவம் உயர்த்தி “அப்படி என்ன கேள்வி என்றேன்.”





இறுக்கம் தளர்ந்து சற்றே கோபமான முகத்தோடு “இந்த வேலை உனக்கு வேண்டும் என்றால் ஒன்னரை இலட்சம் தரனும் என்றார்கள்!!!. ஏழு ஆயிரம் மாதச் சம்பள வேலைக்கு ஒன்னரை லட்சம் கொடுத்து சேர்ந்தால் நாங்கள் அந்த ஒன்னரை லட்சம் பணத்தை எப்படி நேர்மையாக சம்பாதிப்பது?” என்று கேட்டார்.





இவரின் இந்த கேள்விக் கனையும் நியாம்தானே ! இதற்கு பதில் சொல்லத்தான் என்னாலும் முடியவில்லை (!!). தெள்ளத் தெளிவாக ஒன்று மட்டும் புரிந்தது வேலையில் சேர இதுபோன்ற லஞ்சத்திற்கு விதை விதைக்கப்படும் இடம் இம்மாதிரியான வேலைக்கு சேருமிடமாக இருப்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை !





-Sஹமீத்






No comments:

Post a Comment

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP