Wednesday, 7 July 2010
நமக்குள் எழும் விடை தெரியா சில கேள்விகள்.....
வசதி வாய்ப்புகளும், அத்தியாவசிய தேவைகளும், அறிவியலின் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும், அதன் பயன்பாடுகளும், மருத்துவ உலகம் மனிதனின் வாழ்நாளை நீடிப்பதற்காக அது எடுத்துக்கொண்ட ஆராய்ச்சிகளும், சிரமங்களும், சவால்களும் அதன் வெளிப்பாடும், பயன்பாடும் அதிகம் இல்லாத அக்கால மனிதர்களின் வாழ்வில் ஏற்பட்ட மனநிறைவும், அமைதியும், சந்தோசமும் விஞ்ஞான வளர்ச்சிகளெல்லாம் விண்ணை முட்டும் அளவுக்கு முன்னேறி இருக்கும் நவீன கணிப்பொறி காலமாக திகழும் நாம் வாழும் இக்காலத்தில் இருப்பதாக தெரியவில்லையே ஏன்?
கிட்டத்தட்ட 80 அல்லது 90 வயதான நடமாடும் பெரியவர்களை ஒரு காலத்தில் அதிகம் பார்த்த நாம் இன்று அதுபோல் அதிகம் பார்க்க முடிவதில்லையே ஏன்?
குளங்களில் மழைகாலத்தில் நிரம்பும் நீர் தேக்கம் இடையில் வரும் கோடைகாலத்தைதாண்டி அடுத்து வரும் மழை காலம் வரை கொஞ்சமேனும் தேங்கி இருந்தது போல் இன்று இருப்பதில்லையே ஏன்?
எவ்வளவோ தூரமான சொந்த,பந்தங்களை (தூரத்துச்சொந்தம்) ஏதேதோ சொல்லி இழுத்துப்போட்டு சொந்தம் கொண்டாடிய மனிதர்கள் அதிகம் இருந்த அக்காலத்தில் இன்று நெருங்கிய சொந்தங்கள் கூட யாரோ/எவரோ, ஏனோ/தானோ என்று எவ்வித இணைப்பும், பிணைப்பும் இல்லாமல் இருந்து வருவது ஏன்?
அன்று பெரியவர்களுக்கு மட்டுமே வந்து அவர்களை கொஞ்ச காலம் படாதபாடு படுத்தி இறுதியில் மரணப்படுக்கையில் படுக்க வைத்த கொடிய நோய்களாம் புற்று நோய், காசநோய், சர்க்கரை நோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் இன்று வாலிபர்களையும், சின்னஞ்சிறார்களையும் கூட விட்டு வைக்காமல் வாட்டி வதக்கி வருவது ஏன்?
மார்க்க விசயமாக இருந்தாலும் சரி, உலக விசயமாக இருந்தாலும் சரி எத்தனையோ விழிப்புணர்வு இயக்கங்களும், கொள்கை கொண்ட இயக்கங்களும், மறுமலர்ச்சி இயக்கங்களும் இன்று தெரு தோறும், ஊர் தோறும் இயங்கி வந்தாலும் அன்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்து வந்த இயக்கங்களால் மக்களுக்கு ஏற்படாது இருந்த குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும், நீயா? நானா? போட்டிகளும் இன்று எல்லா இடங்களிலும் மலிந்து காணப்படுவது ஏன்?
குறைந்த வருவாயில் அதிகமான தேவைகளை நிறைவேற்றிக்கொண்ட அக்கால மனிதர்கள் இன்று அதிகமான வருவாய் இருந்தும் குறைவான தேவைகளையே நிறைவேற்றக்கூடியவர்களாக இருந்து வருவது ஏன்?
எத்தனையோ லட்சோப லட்சம் வருடங்களுக்கு முன் இறைவனால் உருவாக்கப்பட்ட இப்பூமிப்பந்தின் தென் கோடியில் இருக்கும் பனிப்போர்வை போர்த்திய பிரதேசமாம் அண்டார்டிக்கா உலக வெப்பமயமாதல் மூலம் சமீப காலத்தில் மட்டும் உருகி வருவதன் காரணம் என்ன?
பலகோடி வருடங்கள் சூரியனின் கதிர்களை தன்னகத்தே ஈர்த்துக்கொண்டு அதை அப்படியே கிரகித்து வரும் உலகம் இன்று மட்டும் அதன் வெப்பம் அதிகரித்து உலகை பயமுறுத்தி வருவது ஏன்?
தன் சொத்தின் மதிப்பு உலக பண மதிப்பில் எத்தனை பூஜ்ஜியங்கள் இருக்கும் என்று கூட யூகிக்க முடியாத அளவுக்கு பெரும் செல்வங்களைக்கொண்டு வாழ்ந்து வரும் பணக்காரர்கள் மத்தியில் ஒரு பூஜ்ஜியம் கூட இல்லாமல் அதற்காக அன்றாடம் அல்லோலப்படும் கோடான,கோடி மக்கள் இன்று உலகமெங்கும் இருந்து வருவது ஏன்?
எதிர்பாராமல் வந்து பேரழிவை ஏற்படுத்தும் இயற்கை சீற்றங்களாலும், ஆங்காங்கே நடக்கும் விமானம், ரயில் மற்றும் தரை வழி வாகன விபத்துக்களால் மக்கள் அன்றாடம் கொத்துக்கொத்தாக கொல்லப்படுவது ஏன்?
கிராம வாழ்க்கை மற்றும் அதன் இயற்கையை அனுபவிக்க மறந்து நகரத்தின் மேல் தீராத மோகம் கொண்டு சுகாதாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அங்கு மட்டும் மக்கள் குவிந்து வருவது ஏன்?
பசுமையான வயல்வெளிகளும், அதன் மேல் படர்ந்திருக்கும் வெண் கொக்குகளும் இன்று தரிசு நிலமாய் ஆகி அதன் மேல் இன்று வணிக நிறுவங்களும், குடியிருப்புகளும் அதிகம் கட்டப்பட்டு வருவது ஏன்? வயல் வெளியில் மட்டுமே விளைவிக்க முடியும் நெல்மணியை தொழிற்சாலையில் இயந்திரம் கொண்டு உற்பத்தி செய்து மனிதனின் உணவுத்தேவையை நிறைவேற்ற முடியுமா?
பல நல்ல, நல்ல திட்டங்களை மக்களுக்காக அவர்களின் நலன்களுக்காக பொது நல நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு நிரைவேற்றி சரித்திரத்திலும் இடம் பிடித்து எல்லோராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல நல்ல அரசியல் தலைவர்கள் இன்று இல்லாமல் போனது ஏன்?
அன்று ஆடம்பரப்பொருளாக தூரம் வைத்து பார்த்து பேசப்பட்ட கார், இரு சக்கர வாகனம், தொலைக்காட்சி, தொலைபேசி, மின் அடுப்பு, மின் சமைப்பான், கேஸ் அடுப்பு மற்றும் குளிர்சாதனப்பெட்டி போன்ற பொருட்கள் எல்லாம் அன்றாடம் பயன்படுத்தாமல் அக்கால மனிதர்களின் வாழ்க்கை சுமூகமாக நகரத்தான் செய்தது. ஆனால் இன்று இவைகளெல்லாம் அத்தியாவசியப்பொருட்களாக மாறி அது இல்லாமல் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்த முடியாது என்று ஆகிப்போனது ஏன்?
இயற்கையாய் உருவாகி மனிதனுக்கு பயன் தரும் காய்கறிகளும், பழவர்க்கமும், விலங்குகளும் இன்று மரபணு மூலம் உருவாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிப்பது ஏன்?
ஒரு பக்கம் நவீன ஆயுதங்கள் மூலம் போர் என்று சொல்லி பொது ஜனங்களை கொத்து, கொத்தாக கொன்று குவித்து மறுபக்கம் விமானங்கள் மூலம் மனிதாபிமான அடிப்படை என்று சொல்லி உதவிப்பொருட்களை அனுப்பி வைப்பது ஏன்?
உலகில் வாகன உற்பத்தியை அதிகரித்து அதன் சந்தை மூலம் அதிக லாபம் ஈட்டி, அவ்வாகனத்தை நடுத்தர மனிதனும், பாமரனும் பயன்படுத்தும் வண்ணம் எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து அதை இயக்குவதற்கு தேவையான எரிபொருளைப்பெற பெட்ரோலிய உற்பத்தி மூலம் உலகப்பந்தை துளையிட்டு உறிஞ்சி எடுத்து பிறகு உலகம் வெப்பமயமாகி வருகிறது என்று கூக்குரலிட்டு கூட்டம் போடுவது ஏன்?
இவை யாவும் நம்மைப்படைத்த இறைவனுக்கே வெளிச்சம்.
என்னுள் தோன்றிய இக்கேள்விக்கணைகள் சரியா? அல்லது தவறா? என்று தெரியவில்லை. அவ்வப்பொழுது தோன்றும் இது போன்ற கேள்விகள் உங்களுக்கும் தோன்றி இருப்பின் நீங்கள் பின்னூட்டம் மூலமாகவோ அல்லது தனிக்கட்டுரை மூலமாகவோ பகிர்ந்து கொள்ளலாம்.
இன்னும் தொடரும் விடைதெரியா நம் கேள்விகள் இன்ஷா அல்லாஹ்.
வஸ்ஸலாம்..
மு.செ.மு. நெய்னா முஹம்மது
சவுதியிலிருந்து.
Subscribe to:
Post Comments (Atom)
எல்லா கட்டுரைகளும் அருமை. இருப்பினும் இது மிகவும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி .
ReplyDelete